Friday, December 14, 2007

சின்னத்திரை - சின்னா பின்னத்திரை




சின்னத் திரை - இப்போது
சின்னா பின்னத் திரை
சினிமா தாக்கத்தால் டெலிவிஷன் டெலிவிஷமாக மாறி வருகிறது.

செய்தி என்பது - நிகழ்ச்சி நடந்த இடத்தில் இருந்து
ஊர்ந்து,
தேய்ந்து - பல சாயங்களில்
தோய்ந்து - பல அறிஞர்கள்
ஆய்ந்து
வண்ணங்களாய், வடிவங்களாய், வார்த்தைகளாய்
செய்தித் தாளில் மட்டும் வந்தது அக்காலம்

நிகழ்ச்சி நடந்த இடத்திற்கே நம்மை இட்டுச் செல்லுமாம் தொலைக்காட்சி,இக்காலம்.

இன்றைய செய்தி நாளைய சரித்திரம் - ஆனால் தொலைக்காட்சிகளில்
இன்றைய செய்திகளோ சினிமாவினால் அடைந்தன தரித்திரம்.

சிறையுண்ட நடிகரின் முதுகிலும்
கறையுண்ட அரசியல்வாதி தோளிலும் தான்
இன்றைய தொலைக்காட்சி காமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன போலும்!!

இன்றைய சின்னத்திரையும், வெள்ளித்திரையும் - நம் தெளிவான
எண்ணுதலுக்கு திரைகளே என்பதில் ஐயமில்லை.

சின்னத்திரையின் சாதனைகளாம் -
நாடகங்களை நல்ல கருத்துக்களை தாங்கி செல்லும் ஊடகங்களாய் மாற்றியது
காவியங்களை உயிர் ஓவியங்களாய் மாற்றியது.

திரைப்பட ஆக்கிரமிப்புக்கு பின்னால்
சாதனை கண்ட தொலைக்காட்சி,
சாகும் த(ன்)னை காப்பாற்றச் சொல்லும் கூக்குரலே கேட்கிறது.

மக்களால் மக்களுக்கு என்பது உண்மையான ஜனநாயகம்.
தொலைக்காட்சியும், சினிமாவால்,சினிமாவுக்காக என்ற அபாயகரமான
ஜனநாயக கட்டமைப்புக்குள் சிக்கியுள்ளது.

கடலைக் கடைந்து
விஷத்தை கடந்து கிடைத்தது தான்
விஷயம் (அமுதம்) - அதே போல்
செய்தி கடலைக் கடைந்து
நிகழ்ச்சி கடலைக் கடைந்து
சிந்தனை கடலைக் கடைந்து
திரை படைப்பு (சினிமா) என்னும் சிறை அடைப்பை கடந்தால் தான்
நல்ல விஷயம் மக்களுக்கு கிடைக்கும்.

வருடத்தில் சில நாட்கள் மட்டுமே வருவன திருவிழாக்கள்
வண்ணத் திரையாம் சினிமாவும் திருவிழா போன்றதே
சினிமா கலப்படம் கொண்ட சின்னத்திரையோ நமக்கு எல்லா வேளைகளும்
திருவிழாக்கள் தான் என்ற மாயையை ஏற்படுத்தி உள்ளது.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் திருவிழாக்கள் கொண்டாடினால் (சினிமாக்களை ஒலிபரப்பினால்)
இந்நாள் வரை,
கறை விழா திருவிழாக்கள்
வழக்கொழிந்து, சிறப்பிழந்து போகும் அபாயம் உண்டு.

சினிமாவுக்கு எனிமா



ஊமைப் படம்,
காட்சிகளே கருத்துக்கள் ஆகின

பின்பு,
கருத்துக்களே, வசனங்களே, பாடல்களே காட்சியை நிரப்பின

இன்றோ
காட்சிகள் கண்களைப் பறித்தன
(இது போன்ற காட்சிகளைப் பார்ப்பதற்கு பதிலாக யாராவது நம் கண்களை பறித்துக் கொள்ளலாம்)

கருத்துகளில் புரட்சி வெடித்தன
(பல உள்ளர்த்தங்கள் கொண்ட வார்த்தைகள், வசனங்கள் - கண்டிப்பாக இது புரட்சி தான்)

தீயவையே உண்ட
சினிமாவுக்கு
எனிமா               கொடுக்க ஆட்கள் தேவை

(அஜித் பாணியில் - எழுந்துட்டேன்; இதோ வரேன்)

Tuesday, December 11, 2007

டி.ஆர். பாணியில்.....



எதுகைக்கு கவிதையில் ஒரு
பாதுகை

பற்று       -   அதை
உற்று      -   அதனால் துன்பம் பல
பெற்று    -    பாடம் ஒன்று
கற்று       -   அதன் பின்
பற்று
வெற்று  -   என்று உணர்ந்து அதை,
அற்று         வாழ்தல் என்பது உலகத்தின்
சுற்று          தொடங்கி இன்று முதல் உள்ள
கூற்று        இதைக்
காற்று        செல்லும் இடமெல்லாம்
ஏற்று          புனிதனாய் மாற நினைக்கும் மனங்களில் நட வேண்டிய
நாற்று    -  இதை பின்பற்றாத வாழ்வில் தாங்க முடியாத
தூற்று        என்று கனவி தூங்கிய போது முகத்தில் நீர்
ஊற்று

(மாயை எனும்) பூ சுற்றும் சக்கரம்



காலச் சக்கரம் - பொருத்தமான பெயர் தான்
அது சுற்றுகின்ற சுற்றில்..........

நேற்று

பார்த்த        நிகழ்ச்சிகளே
செய்த         வேலைகளே
பயணித்த சாலைகளே
சந்தித்த     மனிதர்களே

இன்றும்

காலச் சக்கரம் - உண்மையிலேயே பொருத்தமான பெயர் தான்

மனிதா...
எழு !!!
இரு  கரங்களிலும் பலுவுடன்
பற்று !!!!
இச்  சக்கரத்தை     வலுவுடன்
சுற்று !!!
உன் இஷ்டம் போல

அதன்     இஷ்டம் போல அல்ல;
உன்தன் இஷ்டம் போல

துணிகரம்   உற்று
சக்கரம்       சுற்று

Tuesday, December 4, 2007

முதல் கோணல்

என் கவிதைக் கிறுக்குக்கெல்லாம் இது தான் மன்றம்

சொல்லத்   தூண்டும் கவிதை - முதற்
சொல்லில் தாண்டும் கவிதை


கவிதை எழுத
   விதை தோன்ற
         தை பொறக்கனும்

வீரம் வர
    ரம் அடிக்க
      'ம்' சரியென்றான்