Friday, December 14, 2007

சின்னத்திரை - சின்னா பின்னத்திரை




சின்னத் திரை - இப்போது
சின்னா பின்னத் திரை
சினிமா தாக்கத்தால் டெலிவிஷன் டெலிவிஷமாக மாறி வருகிறது.

செய்தி என்பது - நிகழ்ச்சி நடந்த இடத்தில் இருந்து
ஊர்ந்து,
தேய்ந்து - பல சாயங்களில்
தோய்ந்து - பல அறிஞர்கள்
ஆய்ந்து
வண்ணங்களாய், வடிவங்களாய், வார்த்தைகளாய்
செய்தித் தாளில் மட்டும் வந்தது அக்காலம்

நிகழ்ச்சி நடந்த இடத்திற்கே நம்மை இட்டுச் செல்லுமாம் தொலைக்காட்சி,இக்காலம்.

இன்றைய செய்தி நாளைய சரித்திரம் - ஆனால் தொலைக்காட்சிகளில்
இன்றைய செய்திகளோ சினிமாவினால் அடைந்தன தரித்திரம்.

சிறையுண்ட நடிகரின் முதுகிலும்
கறையுண்ட அரசியல்வாதி தோளிலும் தான்
இன்றைய தொலைக்காட்சி காமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன போலும்!!

இன்றைய சின்னத்திரையும், வெள்ளித்திரையும் - நம் தெளிவான
எண்ணுதலுக்கு திரைகளே என்பதில் ஐயமில்லை.

சின்னத்திரையின் சாதனைகளாம் -
நாடகங்களை நல்ல கருத்துக்களை தாங்கி செல்லும் ஊடகங்களாய் மாற்றியது
காவியங்களை உயிர் ஓவியங்களாய் மாற்றியது.

திரைப்பட ஆக்கிரமிப்புக்கு பின்னால்
சாதனை கண்ட தொலைக்காட்சி,
சாகும் த(ன்)னை காப்பாற்றச் சொல்லும் கூக்குரலே கேட்கிறது.

மக்களால் மக்களுக்கு என்பது உண்மையான ஜனநாயகம்.
தொலைக்காட்சியும், சினிமாவால்,சினிமாவுக்காக என்ற அபாயகரமான
ஜனநாயக கட்டமைப்புக்குள் சிக்கியுள்ளது.

கடலைக் கடைந்து
விஷத்தை கடந்து கிடைத்தது தான்
விஷயம் (அமுதம்) - அதே போல்
செய்தி கடலைக் கடைந்து
நிகழ்ச்சி கடலைக் கடைந்து
சிந்தனை கடலைக் கடைந்து
திரை படைப்பு (சினிமா) என்னும் சிறை அடைப்பை கடந்தால் தான்
நல்ல விஷயம் மக்களுக்கு கிடைக்கும்.

வருடத்தில் சில நாட்கள் மட்டுமே வருவன திருவிழாக்கள்
வண்ணத் திரையாம் சினிமாவும் திருவிழா போன்றதே
சினிமா கலப்படம் கொண்ட சின்னத்திரையோ நமக்கு எல்லா வேளைகளும்
திருவிழாக்கள் தான் என்ற மாயையை ஏற்படுத்தி உள்ளது.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் திருவிழாக்கள் கொண்டாடினால் (சினிமாக்களை ஒலிபரப்பினால்)
இந்நாள் வரை,
கறை விழா திருவிழாக்கள்
வழக்கொழிந்து, சிறப்பிழந்து போகும் அபாயம் உண்டு.

No comments: